Shurathul Luha

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப் பெயரால்!

(1) முற்பகலின் மீது சத்தியமாக!

(2) இரவின் மீதும் சத்தியமாக., அது அமைதியாக வந்தடையும்போது!

(3) (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை! உம்மைக் கோபிக்கவும் இல்லை.

(4) மேலும் திண்ணமாக பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட உமக்குச் சிறந்தது.

(5) மேலும் விரைவில் உம் இறைவன், நீர் திருப்தி கொள்ளும் அளவு உமக்கு வழங்குவான்.

(6) அவன் உம்மை அநாதையாகக் காணவில்லையா? பிறகு புகலிடம் தந்தானல்லவா?

(7) மேலும் அவன் உம்மை வழியறியாதவராகக் கண்டான்., பிறகு நேர்வழி காண்பித்தான்.

(8) மேலும் அவன் உம்மை ஏழையாகக் கண்டான்., பிறகு செல்வந்தராய் ஆக்கினான்.

(9) ஆகவே நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்.

(10) மேலும் யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.

(11) மேலும் உம் இறைவனின் அருட்கொடை பற்றி எடுத்துரைப்பீராக!

நபிகளார் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த ஒரு நாள் இரவில் வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி வஹி எனும் இறையருட் செய்தியை அறிவித்தார்.அதுதான் ஓதுவீராக, படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு என்று தொடங்கும் ஐந்து வசனங்கள். இவை திருக் குர்ஆனில் சூரத்துல் அலஞக் எனும் 96 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. அன்று முதல் வானவர் தலைவர் ஜிப்ரீல், வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேத வாக்கு களை நபி(ஸல்) அவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தார்.

மக்களின் இதயங்களில் அறிவுச் சுடரைப் பரவச் செய்த பாக்கி யமிக்க அந்நேரம் முதற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். இப்பேரண்டத்தின் அதிபதியாகிய அல்லாஹ், குர்ஆன் வசனங்கள் மூலம் அவர்களுடன் உரையாடியதே அதற்குக் காரணம். அப்போதிருந்து சதாவும் ஜிப்ரீலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நபியவர்கள்.

ஆனால் ஜிப்ரீல் வருகை தருவதும் வஹி அருளுவதும் திடீரெனத் தாமதமானது. அதனால் சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் துயரத்திற்குள்ளானது.

வஹி தாமதமான செய்தி அறிந்த மக்கத்து நிராகரிப்பாளர்கள் நபியவர்களின் தூதுத்துவத்தை அலட்சியமாகக் கருதினார்கள். கேலி பேசத் தொடங்கினார்கள்: "முஹம்மதை அல்லாஹ் கைவிட்டு விட்டான்., வெறுத்து விட்டான்போல் தெரிகிறதே. அதனால்தான் வஹி வருவது நின்று விட்டதோ" என்று ஏகடியம் பேசினார்கள்., எள்ளி நகையாடினார்கள்.

இந்நிலையில்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கி யருளி நிராகரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏளனப்பேச்சுக்கும் மறுப்பளித்து முற்றுப் புள்ளி வைத்தான். அதனால் நபியவர்களின் தூய மனத்திற்கு ஆறுதல் கிடைத்தது. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு இருந்த உயர் பதவி, உன்னத அந்தஸ்து பற்றிய விளக்க மும் அதில் அளிக்கப்பட்டது.

பகலின் ஆரம்ப சில மணி நேரங்கள் மனத்திற்கு மகிழ்ச்சி யாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! இதுபோன்றே இப்புவி மீது கருகருவென இருள் படர்ந்து வரக்கூடிய இரவும் அமைதிக்குக் கட்டியங் கூறக்கூடிய அருமையான நேரம்தான்! இவ் விரு கால நேரத்தின் மீதும் சத்தியம் செய்வதன் நோக்கம் என்ன?

ஒரு பேருண்மையை உணர்த்துவதே நோக்கம். தொடங்கி யிருக்கும் பகலுக்கும் அடர்ந்துவரும் இரவுக்கும் பின்னடைவு இல்லை என்பது போன்று வஹியும் இனி தொடரத்தான் செய்யுமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பறுந்து போகாது! கருணைமிக்க இறைவன் காருண்ய நபியவர்களை வெறுத்திட வில்லை., அவர்கள் மீது அவனுக்கு எந்தக் கோபமும் இல்லை.

நபியவர்களுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் பாக்கியங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். மனித குலம் முழுவதற்கும் அவர்களை ரஸ_லாக -தூதராக அனுப்பி வைத்து அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் அளவே இல்லை!

மறுவுலகமும் நபியவர்களுக்கு இன்னும் சிறப்பாகவே அமையும். அல்லாஹ் தன் தூதருக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அருட் பாக்கியங்களையும் அங்கு வழங்குவான். அவர்களின் உம்மத்தினராகிய முஸ்லிம்களுக்கும் நிறைவாகவே அருளுவான். இவ்வாறு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடைகளை நபி (ஸல்) அவர்கள் பொருந்திக் கொள்வார்கள்.

குழந்தைப் பருவம் முதற்கொண்டே நபியவர்களை அல்லாஹ் கைவிட்டு விடவில்லை. ஆம், அநாதையாகப் பிறந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பராமரித்து வளர்ப்பதற்கென அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபை அல்லாஹ் ஏற்பாடு செய்தான். அவர் மரணம் அடைந்தபொழுது எட்டு வயதுச் சிறுவராக இருந்த நபியவர்களை, பெரிய தந்தை அப+ தாலிப் தனது பராமரிப்பில் ஏற்றார்.

அதன் பிறகு நபியவர்கள் சத்திய நெறி குறித்து சீரிய சிந்தனையில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் நபியவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்பியதும் இல்லை.

பிறகு நபியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சத்திய பாதையின் பக்கம் அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டினான். அதன் பக்கம் மனித குலத்திற்கு அழைப்பு விடுக்கும் தூதராகவும் அவர்களை அனுப்பிவைத்தான்.

ஏழையாக இருந்த நபியவர்களுக்கு அல்லாஹ் உதவினான். ஆம், அவர்களின் பெரிய தந்தை அப+ தாலிபின் செல்வத்தின் மூலம் தேவைகள் நிறைவேறச் செய்தான். பிறகு அவர்களின் அன்பு மனைவி கதீஜா (ரலி)அவர்கள் தம் செல்வம் முழுவதையும் அவர்களிடம் அளித்தார்;கள். இதேபோல் பைத்துல் மால் எனும் முஸ்லிம்களின் பொதுநிதியை அல்லாஹ் நபியவர்களின் அதி காரத்தில் ஒப்படைத்தான். நபியவர்கள் தம்மிடம் இருந்த எல்லாச் செல்வங்களையும் ஏழை எளிய மக்களுக்காகவே செலவு செய்தார்கள்.

இந்த அருட்கொடைகளுக்கு பதிலாகத் தன் தூதருக்கு மூன்று அறிவுரைகள் கூறுகிறான் அல்லாஹ் :

1) நபியே! அநாதைகள் மீது இரக்கம் காட்டுங்கள். கிருபை செய்யுங்கள். அவர்களுடன் அன்பாக நடக்குமாறு முஸ்லிம்களுக்கு ஆணையிடுங்கள்.

2) யாசகம் கேட்பவருடன் மென்மையைக் கடைப்பிடியுங்கள். அவர்களை விரட்டாதீர்கள். அத்தகைய உயர் பண்பைக் கடைப் பிடிக்குமாறு முஸ்லிம்களை ஏவுங்கள்.

3) அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் பற்றி எடுத்துக் கூறுங்கள். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள்;. இறை யருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் உயர் பண்பாட்டை முஸ் லிம்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.

இத்தகைய கட்டளைகளை நபியவர்கள் எப்படி அமல் படுத்தி னார்கள் என்பதை அவர்களின் அழகிய வரலாற்றில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் அநாதைகளை அரவணைத்துப் பாதுகாத் தார்கள் என்பது மட்டுமல்ல அநாதைகளுக்கு ஆதரவு நல்குமாறு பிற மக்களையும் ஏவினார்கள்.

நபியவர்கள் நவின்றார்கள்: "நானும் அநாதைகளைப் பாதுகாப் பவரும் சுவனத்தில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம். -அந் நிலையை, தம் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத் துக் காட்டி விளக்கினார்கள்;" (நூல்: புகாரி)- இது, அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கூலியாகும்.

யாசகமோ உதவியோ கேட்டு வந்த எல்லோருக்கும் நபியவர்கள் வழங்கி மகிழ்ந்தார்களே தவிர எதுவும் இல்லை என்று சொல்லி யாரையும் திருப்பி அனுப்பியதில்லை.

இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் நபியவர்களின் வாhழ் வில் அழகிய முன்மாதிரி உள்ளது. நாவினால் மட்டுமல்ல இறை வனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தும் அழகிய வணக்க வழிபாட்டின் மூலமும் அவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

ஆம், இரவு நேரங்களில் கால் கடுக்க நின்று வெகு நேரம் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது, ஏன் இவ்வாறு உடலை வருத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு,நான் நன்றி செலுத்தக்கூடிய அடியானாகத் திகழ வேண்டாமா? என்று பதில் சொன்னார்கள் ப+மான் நபியவர்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

கவனிக்க வேண்டிய கருத்துகள்

1) நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உன்னத அந்தஸ்தும் உயர் பதவியும்.

2) ஜிப்ரீலை சந்திப்பதிலும் அவரிடம் இருந்து குர்ஆன் வசனங் களைப் பெறுவதிலும் நபியவர்களுக்கு இருந்த அதிக ஆர்வம்.

3) அநாதைகள் மீது பரிவு காட்டுவதும் யாசகர்களிடம் மென்மை யாக நடந்துகொள்வதும் மிக்க மேலான பண்புகளாகும்.

4) அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்வதும் அவனுடைய அருட் கொடைகளை எடுத்துரைப்பதுமே உண்மையான இறைநம்பிக்கையாளனின் குணமாகும்.

0 comments:

Post a Comment