பெருமானார் கண்ட போர்க் களங்கள்

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (3:200)

போர் என்பது மனித வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அம்சம்! அக்கிரமங்களையும், அநீதிகளையும் அகற்றி நியாயத்தை நிலை நிறுத்தப் போரிடாத மனிதன் உயிரற்றுக்கிடக்கும் சடலத்திற்குச் சமம்! அவன் உயிர் வாழ்வதில் யாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.

W. J. Coats தன் ``Armed Forces as power'' எனும் நூலில் பக்கம் 15ல், ``War is a constituent of the history of man kind''

'போர் என்பது மனித வரலாற்றில் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும்'' என்று குறிப்பிடுகிறார்.

மனிதனாகப் பிறந்த ஒருவன் தனிப்பட்ட வெறுப்பு, விருப்பிற்கு அப்பாற்பட்டு நீதி, நேர்மை, நியாயத்தோடு வாழ வேண்டும்; தன்னைப் படைத்து ஆட்சி செய்யும் இறைவன் ஒருவனுக்கு மட்டும் கட்டுப்பட்ட வனாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இறைநம்பிக்கையாளன் ஒருவன் அநீதம் அக்கிரமங்களை எதிர்த்து போராட வேண்டும்.

''எவனொருவன் இறைவழிப் போராட்டத்தை மேற்கொள்ளாமல் அதைத் தன் மனதளவில் கூட நினைக்காமல் இறந்து விடுகிறானோ, அவன் நயவஞ்சகத் தன்மையின் ஒரு பகுதியைத் தன்னுள் கொண்டவனாகவே இறந்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 1

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''ஒருவர் போரில் கிடைக்கும் (கனீமத்) பொருட்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொருவர் புகழ் விரும்பிப் போரிடுகிறார்; மூன்றாமவர் தன் வீரத்தைக் காண்பிப்பதற்காகப் போரிடுகிறார். இதில் இறைவனுக்காகப் போரிடுபவர் யார்?' எனக் கேட்டதற்கு, 'எவர் அல்லாஹ்வின் (கலிமா) மார்க்கம் உயர்வதற்காகப் போராடுகிறாரோ அவரே இறைவழியில் போர் புரிந்தவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.2

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பதில் இறைச்சட்டம் நிலை பெறச் செய்வதற்காக மட்டுமே போர் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. இதனடிப்படையில் தேவைக்கேற்ப போர் நடத்தப் பட வேண்டும்.

போரின் முதற்கட்டமே போராட்டம். அதில் ஈடுபடாத மனிதன் இல்லை. போராட்டக் குணம் மனிதனுள் பிறந்துள்ள பண்பாகும்.

ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் தகுதியைப் பெற்றிருக்கும் சிறுவன் முதல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பெரியவர் வரையிலான அனைவருமே இவ்வுலக வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டு, அவை கிடைக்காத பட்சத்தில் அழுகிறார்கள், குதிக்கிறார்கள், கொதிக்கிறார்கள். இது அவர்கள் அப்போது செய்யும் போராட்டம்.

அந்தச் சிறுவர்கள் வெளியில் சென்று வீதிகளைச் சுற்றி, பள்ளியில் படித்து வரும் காலகட்டத்தில் அப்போதைக்குத் தேவையான சில பொருட்களை வாங்கித்தர வேண்டுமென்ற கோரிக்கையைத் தம் பெற்றோரின் முன் வைக்கிறார்கள். பெற்றோர் அதை மறுத்தால் சிறுவர்களின் கோபமும், பிடிவாதமும் அவர்களைக் கலங்கச் செய்கிறது. இது அவர்களின் அப்போதையப் போராட்டமாகும்.

அவர்கள் திருமண வயதை அடைந்ததும், தங்களுக்குத் திருமணம் தேவை என்பதைத் தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைத்துவிட்டால் சரி; இல்லையெனில் அதற்காகவும் நடக்கிறது ஒரு கடும் போராட்டம்.

இவ்வாறாக அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்ததும் பணி புரியக் கூடிய இடங்களில் ஏதேனும் உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டால், அந்த உரிமைகளை எப்படியும் பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல போராட்டங்களை நடத்துகிறார்கள்.

தள்ளாத வயதையடைந்த காலகட்டத்தில் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகும்போது, தங்களைப் பாதுகாக்கும்படியான கோரிக்கையை தம் சந்ததியினரிடம் வைக்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டால் பலரிடமும் முறையிட்டுக் குமுறுகிறார்கள். அது அவர்கள் அந்நிலையில் நடத்தும் போராட்டமாகும். இத்தகைய போராட்ட மனநிலை மனித மனதில் இயற்கையாகவே இருந்து வருகிறது மனோதத்துவ நிபுணர்களும் இதை ஒப்புக் கொன்கிறார்கள்.

இந்த அடிப்படையிலேயே உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் சக்திக்கும், சூழலுக்கும் தக்கவாறு வாழ்க்கைப் பயணத்தில் போராடிக் கொண்டிருக்கிறான். போராட்டம் என்பது மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளதையே மேற்கண்ட உதாரணங்கள் உணர்த்துகின்றன. இப்போராட்டத்தின் உச்சக்கட்டமே போர்!

போர் என்பதை மனிதன் தன் வாழ்க்கையில் சிந்தித்தே பார்க்கக் கூடாது என்று எண்ணுவது அறிவீனமாகும். அதே போல் போர்செய்து கொண்டே இருப்பதுதான் மனித வாழ்க்கையின் எதார்த்தம் என்று எண்ணுவதும்!

உண்ணுதல், பருகுதல், இன்பம் கொள்ளுதல் போன்ற பல அம்சங்களைக் கொண்டது மனித வாழ்க்கை! அவ்வாறே போர் என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அம்சம் என்பதை மறந்து விடக்கூடாது. மனிதனுக்குத் தூக்கம் வரும்போது தூங்கியாக வேண்டும்; பசி உண்டாகும்போது புசித்தாக வேண்டும்; தாகம் உண்டாகும்போது நீர் பருகியாக வேண்டும். தூக்கம் வந்தும் தூங்காமலோ, பசி ஏற்பட்டும் புசிக்காமலோ, தாகம் ஏற்பட்டும் பருகாமலோ எப்படி இருக்க இயலாதோ அவ்வாறே வாழ்க்கை முழுவதும் இதே செயல்களைச் சதா செய்து கொண்டே இருக்கவும் முடியாது.

இதேபோன்று மனிதன் தன் வாழ்க்கையில் எப்போதும் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினாலோ, அது தேவை ஏற்படும்போதும் செய்யக் கூடாது என்று எண்ணினாலோ தர்ம நியாயங்களை நிலைநாட்ட முடியாது.

இவ்வுண்மையை மனிதச் சமுதாயம் நன்கு விளங்கிக் கொண்டால் போர் என்பதைச் சுத்தமாக ஒதுக்கியும் விடாது; கண்களை இறுக மூடிக்கொண்டு ஆதரிக்கவும் செய்யாது

0 comments:

Post a Comment