புகைத்தல்- மெதுவாக நிகழும் தற்கொலை


புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லை. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும், தீங்குகளையும் உடனே அறிஞர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் பெரும்பாலான சன்மார்க்க அறிஞர்கள் புகைத்தல் ஹராம் என்றே தீர்ப்பளித்துள்ளனர். புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது.
'தீங்கிழைக்கக் கூடிய அனைத்தும் ஹராம்" என்பது இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்று. இவ்வகையில் புகையிலையும் கூட மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடுவிளைவிப்பதால் ஹராமான (தடுக்கப்பட்ட)வற்றின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் முதலிய பல்வேறு சட்ட மூலாதாரங்க@டாக இது நிறுவப்பட்டுள்ளது.
அல்குர்ஆன்
நீங்கள் உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா : 195)

இத்திருவசனம் தீங்குக்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் தடுக்கின்றது. இவ்வகையில் புகைத்தலும் தீங்குக்கும் அழிவிற்கும் வழிவகுக்கின்றது. கண்ணாடி, கல், விஷம் போன்று எவற்றையெல்லாம் உட்கொள்வதால் தீங்கேற்படுமோ அவற்றையெல்லாம் உண்பது ஹராமாகும். அருவருக்கத்தக்கவற்றைத் தவிர, எவற்றையெல்லாம் உட்கொள்வதன் மூலம் தீங்கேற்படாதோ அவற்றை உண்பது ஹலாலனதாகும் என இமாம் நவவீ, 'அர்ரவ்ழதும் நதிய்யா" எனும் நூலில் விளக்குகிறார்.
''நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் கருணையுடையவனாக இருக்கின்றான் (அந்நிஸா : 29)
புகைத்தல் தடுக்கப்பட்ட 'ஃபாஹிஷா" எனப்படும் மிக மோசமான அருவருக்கத்தக்க பாவங்களுள் ஒன்றாகும்.
சிறந்தவற்றையே புசிக்குமாறும் அவையல்லாவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி பல வசனங்கள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.
மக்களே, பூமியில் நீங்கள் ஹலாலான சிறந்தவற்றையே உட்கொள்ளுங்கள் (பகறா)
தூதர்களே, நல்லதையே புசித்து நற்காரியங்களைப் புரியுங்கள். (முஃமினூன்)
விசுவாசிகளே, நாம் உங்களுக்களித்ததில் சிறந்தவற்றையே உண்ணுங்கள். (பகறா)
மோசமானவை, அசிங்கமானவை பற்றி இவ்வாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ''மோசமானவை அதிகமாக இருந்த போதிலும், நல்லதும், மோசமானதும் ஒரு போதும் நிகராக மாட்டா. அறிவுள்ளவர்களே ஜெயம் பெற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். (மாயிதா 100) எனவே சிறந்தவை எப்போதும் சிறந்தவை தாம். மோசமானவை என்றும் மோசமானவை தாம். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றாயிருக்க முடியாது. சுத்தமான, பிரயோசனமாக, சிறந்த விசயங்கள் அனைத்தும் ஹலால் எனவும், அழுக்கான தீங்கு பயக்கின்ற மோசமான அனைத்தும் ஹராம் எனவும் ஒரு சட்ட விதி குறிப்பிடுகின்றது. இவ்விதி உணவாகவும் பானமாகவும் கொள்ளப்படுகின்ற அனைத்துக்கும் பொருந்தும். மேற் சொன்ன குர்ஆன் வசனத்தில் 'மோசமானது" எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'கபீஸ்" எனும் சொல், வெறுக்கத்தக்க சுவையும் வாசனையும் கொண்ட அருவருக்கத்தக்க ஒன்றைக் குறிக்க அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டுகிறது.
புகைத்தல் என்பது தீங்கிழைக்கின்ற அதேவேளை பிரயோசனமற்றதாகவும் உள்ளது. பிரயோசனம் அற்ற ஒன்றிலே செல்வத்தை வீண் விரயம் செய்வது ஹராம் என்பது தெளிவானதே.
உங்களது வாழ்வின் ஆதரமாக ஆக்கியுள்ள செல்வத்தை புத்தி குறைவானவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். (நிஸா : 05)
புகைப்பவர்கள் இந்நச்சுப் பதார்த்தத்தை விலை கொடுத்து வாங்குவதனூடாகத் தமது உயிர்களையும், செல்வத்தையும் தாமாகவே எரித்துக் கொள்கின்றனர். இவர்களைப் போன்ற அறிவிலிகள் எவரும் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. இவ்வாறு உலகிலோ அல்லது மறுமையிலோ எவ்விதப் பிரயோசனமும் அளிக்காத விசயங்களில் தம் செல்வத்தை வீண் விரயம் செய்பவர்களை சமூகத்திலிருந்து தள்ளி, ஒதுக்கி வைக்க வேண்டும் என் சன்மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ''உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்"". இவ்வசனத்தில் அல்லாஹ{த்தஆலா வீண் விரயம் செய்வதைத் தடுத்துள்ளான். இது ஹராமான விசயத்தில் செலவளிப்பதையோ, அநாவசியமாக செலவளிப்பதையோ, அளவு மீறிச் செலவழிப்பதையோ குறிக்கலாம். ''நீங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்"" (இஸ்ரா : 26)
வீண் விரயம் என்பது பின்வருவனவற்றை உணர்த்துகின்றது.
செல்வத்தை ஹராமான ஒன்றில் செலவு செய்தல்
செல்வத்தைப் பிரயோசனமற்ற, அவசியமற்ற விசயங்களில் செலவு செய்தல்
செல்வத்தை அளவுக்கதிகமாக விரயம் செய்தல் (ஆகுமான விசயங்களாயினும் சரியே)
அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற, சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற அநியாயமான விசயங்களில் செலவு செய்வதை வீண் விரயம் செய்தல் (தப்தீர்) எனும் பதம் குறிப்பதாக இமாம் கதாதா விவரிக்கின்றார். எனவே எந்த விளக்கத்தினூடாகப் பார்ப்பினும் புகைத்தலுக்காகச் செலவு செய்வது வீண் விரயம் என்பது வெள்ளிடைமலை போன்றதாகும்.
ஸ{ன்னா
''போதை ஏற்படுத்தக் கூடிய, பலவீனத்தை உண்டு பண்ணக் கூடிய அனைத்தும் ஹராம்"" ஆகும் என நபி (ஸல்) அவர்க்ள நவின்றதாக உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸின்படி போதையை ஏற்படுத்தாவிடினும் உடலில் பலவீனத்தை ஏற்படுத்தக் கூடியதும் ஹராமானதாகும். புகைத்தல் நிச்சயம் இதில் அடங்கி விடுகிறது. நபி (ஸல்) அவர்கள் பகன்றதாக அனஸ் பின் மாலிக் (ரலி) இவ்வாறு கூறுகின்றார்கள் : ''போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமானதாகும். மேலும் விறைப்பை (தளர்ச்சியை) உண்டாக்கும் அனைத்தும் ஹராமானதாகும். போதையை ஏற்படுத்துவதாயினும் அது கொஞ்சமாயினும், கூடுதலாயினும் ஹராமாகும். மேலும் புத்தியை மயங்கச் செய்கின்ற அனைத்தும் ஹராமாகும்"".
போதையை ஏற்படுத்துவதற்கு உதாரணமாக மது, கஞ்சா, என்பவற்றைக் கூறலாம். விறைப்பை, தளர்ச்சியை புகைத்தல் உண்டு பண்ணுகிறது. மனித மூளையிலே ஒரு விறைப்பை ஏற்படுத்துவதால் நிகோடின் உயிருக்கு ஆபத்தானது என்பதைத் தெரிந்தும் பலர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் ஹதீஸின் படி புகைத்தல் ஹராம் என்பது மிகத் தெளிவாகின்றது.
''யார் நஞ்சுண்டு தன்னைத் தானே கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகிலே நஞ்சருந்திய நிலையிலே என்றும் நிரந்தரமாக நிலைத்திருப்பார்"" என நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டதாக இமாம்களான புகாரீ, முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சருந்துவதை தடை செய்கிறது. புகையிலை நிகோடின், தார் போன்ற நச்சுப் பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு ஒருவர் புகைப்பானாயின் வேண்டுமென்றே தன்னைத் தானே அவர் கொலை செய்கிறார். சிறிது சிறிதாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் இச்செயல் ஒரு தற்கொலையன்றி வேறில்லை. ''தனக்குத் தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது"" என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்க, இமாம்களான அஹ்மத், இப்னு மாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் மூலம் தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. புகையிலை உடலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பாதிப்பை உண்டு பண்ணும் எனும் உண்மை வைத்தியர்கள், துறைசார் அறிஞர்கள் வாயிலாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஆதாரமின்றி பேசுவதையும் அதிகமாகக் கேள்வி கேட்பதையும் செல்வத்தை வீண் விரயம் செய்வதையும் தடுத்துள்ளார்கள்"" என அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இன்னுமோர் ஹதீஸில் ''தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தான். தன் உடம்பை எதில் அழித்தான். தன் செல்வத்தை எங்கிருந்து பெற்றான். எதில் செலவளித்தான். தன் அறிவினால் எதனைச் செய்தான் ஆகிய நான்கு விசயங்கள் வினவப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் நகர மாட்டாது"" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம் : திர்மிதி)
இந்த ஹதீஸின்படி பின்வரும் நான்கு விசயங்களுக்கு அவன் மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
1. வாழ்நாள் :
புகைப்பிடிப்பவன் வாழ்நாட்களை வீணாக்கி, அழித்துக் கொள்வதனால், இறைவனுக்கு மாறு செய்கிறான்.
2. அறிவு :
புகைப்பிடிப்பவன் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களையும் அது ஷரீஆவில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிந்த பின்னரும் அப்பழக்கத்திலே பிடிவாதமாயிருப்பானாயின் அவனுக்களிக்கப்பட்ட அறிவு அவனுக்கெதிராகவே மறுமையில் சாட்சி சொல்லும்.
3. செல்வம் :
புகைத்தலுக்காக பணம் ஒதுக்குவது செல்வத்தைப் பிரயோசனமற்ற வகையில் வீண் விரயம் செய்வதாகும். செல்வமானது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அமானிதம். அதனை அவன் திருப்தியுறும் வகையில், ஆகுமான விசயங்களில் செலவளித்தல் அவனது பொறுப்பாகும்.
4. உடல் :
மனித உடல், அதனுள் பொதிந்துள்ள பலம், சக்தி என்பன அவனது ஒவ்வொரு உறுப்பையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அமானிதங்களாகும். இதற்கு மாற்றமாக அவன் தனதுடலை நோய்களின், பாவங்களின் உறைவிடமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. புகைத்தல் எனும் துறையினூடாக அவனது உடலினுள் ஷைத்தான் நுழைய ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. ''கேள்வி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்"" என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. ''யார் வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டை உண்கிறாரோ அவர் பள்ளியுள் நுழையாது வீட்டிலே இருந்து கொள்ளட்டும்"" (புகாரீ, முஸ்லிம்) இந்த ஹதீஸினூடாக நபி (ஸல்) அவர்கள் வெங்காயம், வெள்ளைப் பூண்டு உண்டவர்களுக்கு முஸ்லிம்களின் அவை, பள்ளிவாசல் என்பவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கமாறு கட்டளையிட்டார்கள். மேற்குறிப்பிட்டவை போலன்றி ஆரோக்கியத்திற்குக் கேடுவிளைவிக்கின்ற, அதேவேளை அசிங்கமான, மிகவும் வெறுக்கத்தக்க வாசனையை வெளிப்படுத்தும் புகைத்தலுக்கு அடிமையானவர்கள் பள்ளிவாயலுக்குள் நுழைவது என்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாகப் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் : ''ஹலாலான விசயங்கள் தெளிவானவை. ஹராமான விசயங்கள் தெளிவானவை. இவற்றுக்கிடையே அநேகமானோர் புரிந்து கொள்ளாத சந்தேகத்துக்கிடமான விசயங்கள் உள்ளன. யார் இவற்றைத் தவிர்ந்து கொள்கிறாரோ அவர்தன் மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார். யார் அவற்றிலே விழுந்து விடுகிறாரோ அவர் ஹராத்திலே விழுந்து விடுகிறார். (ஸஹீஹான 6 கிரந்தங்கள்)
தற்கொலை செய்து கொண்டோரைப் பற்றிக் கூற வந்த நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள் :
''உலகியே ஒருவர் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ, அதன் மூலம் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான்"" (அஹ்மத்). எனவே நிக்கோடின் என்ற விஷத்தினால் தற்கொலை செய்பவனின் முடிவும் மறுமையில் பயங்கரமாக இருக்கும்.
கியாஸ்
போதையூட்டுபவை, விறைப்பூட்டுபவை, அருவருக்கத்தக்கவை, நஞ்சு என்பவற்றோடு புகையிலை ஒப்பீட செய்யப்படுகின்றது. அடிப்படையில் மேற்சொன்னவை ஹராமாக்கப்படக் காரணம் போதையூட்டல், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவித்தல் எனும் போது (இல்லத்) நியாயமாகும். எனவே, இவ்வகையில் புகைத்தலும் இந்நியாயத்தைக் கொண்டுள்ளதால் ஹராமெனத் தீர்மானிக்கப்படுகிறது.
ஷரீஆ விதிகள் (கவாஇத் பிக்ஹிய்யா)
பல்லாயிரக்கணக்கான சட்டங்களைப் பெறத்தக்க குர்ஆன், ஹதீஸின் அடியாகப் பெறப்பட்ட சில அடிப்படை ஷரீஆ விதிகள் இஸ்லாமிய சட்டவாக்கக் கலையிலே காணப்படுகின்றன. இவற்றின் மூலம் காலவோட்டத்தில் புதிதாகத் தோன்றுகின்ற பிரச்னைகளுக்கு அவ்வப்போது தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வகையில் புகைத்தலைத் தடை செய்யும், ஹராமாக்கும் சில சட்ட விதிகள் வருமாறு :
1. தனக்கோ பிறருக்கோ தீங்கிழைக்கக் கூடாது.
இதன் உப பிரிவுகளில் ஒன்றே, ''தீங்கு தவிர்க்கப்பட வேண்டும்"" என்பதாகும். இவ்விதி பற்றி அறிஞர் முஸ்தஃபா ஸர்கா அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். இவ்விதியானது ஷரீஆவின் தூண்களில் ஒன்று. இதற்கு ஏராளமாக குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. தீங்கையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுத்து நிறுத்துவதற்கான அஸ்திவாரம் இதுவே. நலன்களை நிலை நிறுத்தவும் கேடுகளைக் களைந்தெறியவும் உதவும் அடிப்படையும் இதுவே. நிகழ்வுகளுக்கு ஷரீஆ சட்டங்களைப் பெறுவதில் சட்டவியல் விற்பன்னர்களின் அளவுகோலும் இதுவே. (அத் மத்கல் - பக்.02)
2. பிரயோசனமளிப்பவை அடிப்படையில் ஆகுமானவையாகும்.
புகைத்தல் அடிப்படையில் பிரயோசனமளிக்காத அதேவேளை, தீங்கையும் அழிவையும் ஏற்படுத்துவதால் அது ஹராமானதாகும்.
3. நலன்களை நிலைநிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது.
புகைத்தல் ஆரோக்கியத்துக்கும், செல்வத்துக்கும் கேடு விளைவிப்பதோடு மக்களுக்குத் தீங்கையும் ஏற்படுத்துகின்றது. நலனும் கேடும் ஒரே நேரத்தில் எதிர்ப்படின், கேட்டினைத் தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். ஏனெனில், ஷரீஆவானது விதிக்கப்பட்டவற்றை விட விலக்கப்பட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது. இதனால் தான் நபி (ஸல்) அவாகள், ''நான் ஏவியவற்றை நீங்கள் முடிந்தளவு எடுத்து நடவுங்கள், தடுத்தவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்"" என்றார்கள்.
4. தீமைகளுக்கான வாயில்கள் அடைக்கப்படல் வேண்டும்.
ஹராத்துக்கு இட்டுச் செல்பவையும் ஹராமானதாகவே ஷரீஆவில் கருதப்படுகிறது. புகைத்தல் பலவீனத்தை ஏற்படுத்துகிற. எனவே, மேற்சொன்ன விதியினடிப்படையில் புகைத்தலானது இன்னும் பல ஹராமான விடயங்களுக்கு இட்டுச் செல்வதால் ஹராமானதாகி விடுகிறது.
5. ஹலால் ஹராம் என்பன ஒன்று சேர்ந்திருப்பின் ஹராமே முதன்மை பெறும்.
இமாம் ஜுவைனி அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் :
ஒரு விசயத்தில் மிக ஹலால், ஹராம் என்பன கலந்திருப்பின் அது ஹராமாகவே கருதப்படும். இவ்விதியினூடாகவும் புகைத்தல் ஹராம் என நிரூபிக்கப்படுகிறது. புகைத்தலில் ஒரு சில நலன்கள் இருப்பதாக சிலர் வாதிட்டால் இவ்விதியினூடாக அவர்களது வாதம் முறியடிக்கப்படுகிறது. உண்மையில் நவீன விஞ்ஞானம் நாளுக்கு நாள் புகைத்தலினால் விளையும் புதுப்புது பாதகங்களை கேடுகளை கண்டுபிடிக்கிறதே தவிர அதனால் ஏற்படும் சாதகங்களை முன்வைக்கவில்லை.
எனவே, மேலே நாம் விளக்கிய அடிப்படைகள் மற்றும் ஆதாரங்களினூடாக புகைத்தல் ஹராமானது என்பது மிகவும் தெளிவாகிறது. இவற்றையும் மீறி ஒருவர் இப்பழக்கத்தில் தொடர்ந்துமிருப்பின் அவர் பிடிவாதக்காரராக அல்லது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவராகவே நிச்சயம் இருப்பார் என்பதில் ஐயமில்லை.



--
You received this message because you are subscribed to the Google
Groups "روضة الجنة" group.
To
If you have trouble viewing or submitting this form, you can fill it out online:
http://spreadsheets.google.com/viewform?formkey=dHQyWEZsR0x6SUhaYm80d1Q1Y1lEYXc6MA

Invite Your Friends

please Type your friends' mail addresses to add this group















0 comments:

Post a Comment