இறைவன் மனிதனுக்கு மட்டும் 'சிந்தித்து உணர்தல்" என்ற மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கி உள்ளான். எனினும் மனிதர்களில் பலர் இந்த அறிவைப் பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்துவதே கிடையாது.
இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு மனிதனுள்ளும் புதைந்து கிடக்கின்ற இந்த அறிவுப் பொக்கிஷத்தைப் பற்றி பலர் அறிவதே இல்லை. தன்னுள் புதைந்து கிடக்கும் இந்த அறிவை ஒருவன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்று சொன்னால், அந்தக் கணம் வரைக்கும் எதுவொன்று அவனுக்கு விளங்காத அற்புதமாக இருந்ததோ, விடை கிடைக்காத புதிராக இருந்ததோ, அவை அத்தனையும் விளங்க ஆரம்பித்து விடும். இன்னும் அவன் அதில் மூழ்கிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவனது சிந்திக்கும் திறன் கூடுவதோடு மட்டுமல்லாமல், பலருக்கு இது கைவரக் கூடிய கலையுமாகி விடும். அதாவது ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் உங்களிடம் மலர வேண்டும் என்றால், அது குறித்து நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
திருமறைக் குர்ஆனில், இறைவன் கூறுகின்றான் - நம்பிக்கையாளர்களின் அனைத்துச் சூழ்நிலைகளின் பிரதிபளிப்பானது, அவர்களைச் சிந்திக்க வைத்து பயனுள்ள முடிவுகளுக்கு அவனை இட்டுச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான் :
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!"" (3:190-191).
இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் இறைவனை எவ்வாறு அடிக்கடி நினைவு கூற வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள் எனில், அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வினை நினைவு கூறக் கூடிய இல்லத்திற்கும், இன்னும் அவனை நினைவு கூறாத இல்லத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் உயிருள்ள மற்றும் உயிரற்றதற்கும் உள்ள வித்தியாசமாகும் என்று கூறினார்கள். (புகாரீ)
இன்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது செயல்களிலேயே மிகவும் சிறந்த செயலாகவும், இன்னும் உங்களுக்கு உயர்ந்த தகுதிகளைப் பெற்றுத் தரக் கூடியதும், இன்னும் உங்களின் மிகவும் பரிசுத்தமான அரசன் உங்களுக்கு தங்கத்தையும் வெள்ளியையும் கொடுப்பதைக் காட்டிலும் உயர்வான அந்தஸ்தை அளிக்கக் கூடியதொன்றை உங்களுக்கு நான் கற்றுத் தரவில்லையா? எனக் கேட்டு விட்டுக் கூறினார்கள் , நிச்சயமாக, அல்லாஹ்வை (திக்ரு) நினைவு கூறுங்கள். (புகாரீ)
இருப்பினும், உங்களில் எவர் சிந்தித்துணர்வதில்லையோ, அவர் நிச்சயமாக சத்தியப் பாதையை விட்டும் தூரமாகவே இருந்து கொண்டிருக்கின்றார். அவர் தனது வாழ்க்கையை சொந்த அனுமானங்கள் மற்றும் தவறிழைப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார். இதன் விளைவாக, இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும், நாம் ஏன் இந்த உலகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையையும் அவர் அறிய முடிவதில்லை. இருப்பினும், அல்லாஹ் மனிதர்கள் நினைப்பது போல அதனை வீணுக்காகவும், விளையாட்டுக்காகவும் படைக்கவில்லை என்பதை திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது :
வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (44:38-39)
''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"" (23:15)
அல்லாஹ்வினுடைய அத்தாட்சிகளையும், அவனது பிரமிக்கத்தக்க படைப்பினங்களையும், அவன் உருவாக்கி வைத்திருப்பவற்றையும் பார்ப்பார்களானால், அவர்கள் அது படைக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள், அவர்கள் தான் தங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உயர்ந்த சிந்தித்து உணரும் தன்மையின் அவசியத்தை அப்பொழுது புரிந்து கொள்வார்கள்.
தங்களுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் பொருள்களில் சிறியதோ அல்லது பெரியதோ அவற்றின் படைப்பின் மக்கத்துவத்திலிருந்து, அவர்கள் ஒரு முடிவுக்கு வரக் கூடியவர்களாக இருப்பார்கள். இதனைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள் : உங்கள் இதயங்கள் சிந்திக்கட்டும், இன்னும் அவை (உங்களைப் படைத்த) இறைவனது நினைவாகவே இருக்கட்டும்.
உதாரணமாக, நம்மைச் சுற்றிலும் விரவிக் கிடக்கின்ற இயற்கையைப் பாருங்கள். எவர் அல்லாஹ்வின் மீதும் இன்னும் நம்மைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், தங்களைச் சுற்றிலும் விரவிக் கிடக்கின்ற இயற்கையின் அழகைக் காணட்டும். அவை அத்தனையையும் அழகாகப் படைத்தவன் இறைவன் தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும். அந்த அத்தனை அழகிற்கும் சொந்தக்காரன் அல்லாஹ் தான் என்றும், கண்ணைக் கவரக் கூடிய அத்தனையிலும், அழகு என்ற அவனது தன்மை புதைந்து கிடக்கின்றன என்பதைக் காணட்டும். அதன் அழகிலிருந்து பருகிய இன்பத்தினைப் பெற்றுக் கொண்டு அவன் அல்லாஹ்வை நினைவு கூறக் கூடியவனாக இருப்பான். எவ்வாறெனில், அவனை நினைவு கூறக்கூடியவனது இதயம் ஒளி பொருந்திய வீட்டினைப் போலவும், அல்லாஹ்வை நினைவு கூறாதவனது இதயம், ஒளி இழந்த வீடு போலவும் காட்சியளிக்கும்.
நீங்கள் காலாற நடந்து போகும் பொழுது, உங்களைக் கடந்து செல்லக் கூடிய பறவையைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை வண்ணங்கள், ஊர்ந்து செல்லக் கூடிய எறும்பைப் பாருங்கள், அதில் ஒரு சீரான அணிவகுப்பு, இவை அத்தனையிலும் உங்களுக்குத் தேவையான, இறைவனைப் பற்றிச் சிந்திப்பதற்கான விவரங்கள் புதைந்து கிடக்கின்றன. புதைந்து கிடக்கின்ற உண்மைகளை முகிழ்ந்து ஆய்வு செய்பவர்களுக்கு விளங்கும், இறைவனது மகத்துவமும், அவனது மாட்சிமைமிக்க சக்தியும்..!
பறந்து செல்லும் அந்த வண்ணத்துப் பூச்சியைப் பாருங்கள், நமது கண்ணைக் கவரும் எவ்வளவு அருமையான படைப்பு. கண்ணாடித் தாள் போன்ற அதன் சிறகில் தான் எத்தனை வண்ணங்கள், என்ன அழகான கோடுகள். யார் அதனை வரைந்தது, அதன் வண்ணத்தை குலைத்தெடுத்து நேர்த்தியாகப் பூசியது யார், இன்னும் அந்த வண்ணத்தில் ஒளியையும் இணைத்து மிளிரச் செய்தது யார், இவை எல்லாம் மனிதனது படைப்பாற்றல் அல்லவே, அந்த மகத்துவமிக்க இறைவனின் படைப்பின் ரகசியமல்லவா!!
அதனைப் போலவே, விதவிதமான தாவர இனங்களைப் பாருங்கள். மரங்களைப் பாருங்கள், பற்றிப் படரும் கொடியினத்தைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை அழகு. அவற்றில் தான் எத்தனை விதவிதமான பூக் கூட்டங்கள். அவற்றின் வண்ணங்களில் தான் எத்தனை விதங்கள். மரங்களைப் பாருங்கள், அவற்றில் தான் எத்தனை வேறுபாடுகள். ஒரே தண்ணீரைக் குடித்து, ஒரே இடத்தில் வளரும் வேம்பும், கரும்பும்..! எத்தனை மாற்றங்கள், ஒன்று கசக்கின்றது, ஒன்று இனிக்கின்றது. அதில் கசப்பை ஊட்டியது யார்? இன்னொன்றில் இனிப்பைத் தூவியது யார்?
அந்த மலரைப் பாருங்கள். காலையில் தான் மலர வேண்டும் என்று அவற்றுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? இன்னும் மாலையில் மலரும் மல்லிகையைப் பாருங்கள், மாலையில் தான் மலர வேண்டும் என்று அதற்குக் கற்றுக் கொடுத்தது யார்? அவற்றின் அழகான இதழ்களைப் பாருங்கள், அவை முதிர்ந்து அவற்றிலிருந்து வெளிவரும் விதைகளைப் பாருங்கள், யார் அவற்றை அச்சில் போட்டு வார்த்தெடுத்தது? இதனைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்தோமா?
சூரிய காந்திப் பூவைப் பாருங்கள்..! சூரியனை நோக்கியே அதனது முகம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அதற்குக் கற்றுக் கொடுத்தது யார்?
இன்னும் அவற்றில் இருந்து வெளிவருகின்ற சுகந்தம் தரக் கூடிய வாசனைகளைப் பாருங்கள். அவற்றில் தான் எத்தனை எத்தனை விதவிதமான வாசனைகள். அந்த ரோஜாவைப் பாருங்கள்..! அத்தனை இதழ்களிலும் மாறாத ஒரே மாதிரியான மாறாத வாசனை. இன்றைக்கிருக்கின்ற மிகவும் உயர் தொழில் நுட்பத்தினால் கூட, ஒரே விதமான வாசனையை உருவாக்க முடியாது. ஒவ்வொரு பரிசோதனைச் சாலையின் தயாரிப்பிலும் மாறுபாடு காணப்படும். தொழிற்சாலைகளில் உற்பத்தியாகக் கூடிய ரோஜா வாசனைத் திரவியத்தைப் பாருங்கள், அதனை அதிகம் தெளித்தால், அதன் வாசனை கூட நமக்கு வெறுப்பைத் தந்து விடும். ஆனால் அந்த மலர்களை நீங்கள் கிலோ கணக்கில் வைத்திருந்தாலும் ஒரே விதமான வெறுப்பூட்டாத வாசனை தந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
இறைநம்பிக்கை கொண்டவர்கள், இவை அத்தனையும் நமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றது என்று சிந்தித்து, அதனைப் படைத்துத் தந்திருக்கும் இறைவனை நினைவு கூறக் கூடியவர்களாகவும், புகழக் கூடியவர்களாகவும் இன்னும் அதற்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இதனால் தான் தங்களது வாழ்விடங்கள், தோட்டங்கள் மற்றும் தங்கள் மனங் கவரக் கூடிய இடங்களில் நுழையக் கூடியவர்கள் இறைவனைப் புகழ்ந்து இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் :
நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹ{; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்" - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - (18:39)
இவ்வாறு நினைவு கூறுவதன் மூலம், இறைவன் அழகுடன் அனைத்தையும் படைத்திருப்பதன் நோக்கம் என்னவெனில், இந்த மனித சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதற்காகத் தான், என்பதைப் புரிந்து கொள்வான். இவ்வாறாக இறைநம்பிக்கை கொண்ட மனிதனுக்கு உயிர் கொடுத்து எழுப்பபப்படக் கூடிய அந்த மறுமை நாளில், தனது அருட்கொடைகளில் இருந்து அபரிதமான வளங்களை வழங்கிடுவான். அந்த அருட்கொடைகளை அவனது வாழ்நாளில் வேறு எங்கினும் கண்டிருக்கவே மாட்டான். அதனைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
சுவனமானது அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய(வர்களின்) தளமாக இருக்கின்றது.(அஹ்மது)
இவற்றை அனுபவிக்கத் துடிக்கும் மனிதன், இறைவன் மீது முன்பைக் காட்டிலும் அதிகமாக அன்பு வைத்து நேசிக்கக் கூடியவனாக மாறி விடுவான்.
அந்த நேசமே, அவனை இறைநம்பிக்கை கொண்ட மனிதனாக, அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மனிதனாக மாற்றம் பெறச் செய்யும்.
ஆம்..! படைத்தவன் மீது நம்பிக்கை கொள்வதற்கு, படைப்பினங்களில் அத்தாட்சிகள் விரவிக்கிடக்கின்றன.
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!"" (3:190-191).
http://spreadsheets.google.com/viewform?formkey=dHQyWEZsR0x6SUhaYm80d1Q1Y1lEYXc6MA
0 comments:
Post a Comment