مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللّهُ يُضَاعِفُ لِمَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ {261}
2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902
ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வர்ணித்துக் கூறி இருக்கின்றார்கள்.
புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.
2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,
1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.
2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.
மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.
ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.
உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.
ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.
சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.
நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.
இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,
கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,
நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.
இவ்வளவு தான் என்ற வறையரை.
இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமையும்.
நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.
தடுத்துக் கொண்டால் ?
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காகவென்ற சிந்தனையில் தானதர்மம், மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான்.
இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும், அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான். கூடுதல் அபிவிருத்தயை எதிர் பார்க்க முடியாது.
கொடு;க்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.
நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.
புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
0 comments:
Post a Comment