இஸ்ராவும் மிஃராஜும்


நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும்- தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும்- அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது. 

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான். 

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும்- அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும். 

இஸ்ராவும் இஸ்லாத்தின் பூர்வீகமும் 

நபிகளாரின் விண்ணுலக யாத்திரை இப்ராஹீம் (அலை)- இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு இறை வழிகாட்டலும்- வஹியும் இறங்கிய தலமான அல்மஸ்ஜிதுல் ஹராமுடன்- மூஸா (அலை)- ஈஸா (அலை) போன்றோருக்கும் இறைத்தூது கிட்டிய இடமான மஸ்ஜிதுல் அக்ஸாவுடனும் தொடர்புற்றுள்ளது. இது உணர்த்தி நிற்கும் உண்மை என்ன- இவ்விண்ணுலக யாத்திரையில் இவ்விரு இடங்களும் தொடர்புபட்டுள்ளதன் தத்துவம் யாது என்பன நோக்கத்தக்கவை. உண்மையில் இந்த யாத்திரை- குறித் இரு தலங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டதன் மூலம் உணர்த்தப்படும் ஒரு பேருண்மை இருக்கிறது. அவ்வுண்மை யாதெனில்- நபி (ஸல்) அவர்கள் நூதனமாகத் தோன்றி ஒரு நபியல்ல. அவர் கொண்டு வந்துள்ள மார்க்கமும் புதியதொன்றல்ல. மாறாக- எந்த அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தனது விண்ணுலக யாத்திரையைத் துவங்கினார்களோ அதே இடத்தில் தமக்குரிய இறைத்தூதைப் பெற்ற முன்னைய தூதர்களான இப்றாஹீம் (அலை)- இஸ்மாயீல் (அலை) ஆகியோரும் நபியவர்கள் எந்த அல்மஸ்ஜிதுல் அக்ஸாவை தனது பயணத்தில் கடந்து சென்றார்களோ அதில் வைத்து- அதன் சூழலில் இறை வழிகாட்டலைப் பெற்ற மூஸா (அலை)- ஈஸா (அலை) உட்பட இன்னும் பல இறைத் தூதர்களும் போதித்த அதே மார்க்கத்தையே முஹம்மத் (ஸல்) அவர்களும் போதித்தார்கள் என்ற உண்மையே இங்கு போதிக்கப்படுகிறது. இந்த வகையில் அல் இஸ்ராவை நினைவுகூறும்போதெல்லாம் மதம்- இறை வழிகாட்டல் பற்றிய இந்தப் பேருண்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். இஸ்ராவின் மூலம் செய்முறையாகக் காட்டப்பட்ட இவ் உண்மை அல்குர்ஆனில் சித்தாந்த ரீதியில் மிக விரிவாக விளக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கிறோம். 

உலகில் தோன்றிய அனைத்து இறை தூதர்களும் ஒரே வரிசையில் வந்தவர்கள். ஒரு கட்டடத்தின் கற்கள். அவர்கள் போதித்த மார்க்கம் ஒன்றே. அது இஸ்லாமாகும். அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்தனர் என அல்குர்ஆன் கூறும் ஓர் அடிப்படை உண்மையைச் சுட்டிக் காட்டுவதாக அல் இஸ்ரா அமைந்தது. 

இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக தூய்மையான முஸ்லிமாகவே இருந்தார். (3:67) 

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ- அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும்- இப்றாஹீமுக்கும்- மூஸாவுக்கும் - ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால். ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்- நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ- அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13) 

இது இஸ்ரா உணர்த்தி நிற்கும் ஒரு பேருண்மையாகும். இந்த வகையில் இஸ்ரா நிகழ்ச்சியை நினைவுகூறும் பொழுது எமது ஞாபகத்திற்கு வருவது அல் மஸ்ஜிதுல் ஹராமும்- அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமாகும். 

விடுதலையைத் தேடும் குத்ஸ் 

இஸ்ரா கூறும் மேலும் ஓர் உண்மையும் இருக்கிறது. இஸ்ராவுடனும்- தவ்ஹீதை நிலைநாட்ட வந்த இறைத்தூதர்களுடனும் குறித்த இரு தலங்களும் தொடர்புடையவனாக இருப்பதன் காரணமாகக அவ்விரண்டு புனிதஸ்தலங்களையும் அனைத்து வகையான ஷிர்க்குகள்- அநியாயங்கள்- அக்கிரமங்கள்- குழப்பங்கள் ஆகியவற்றில் இருந்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அங்கே தவ்ஹீதினதும் ஈமானினதும் கொடியே பறக்க வேண்டும் என்ற உணர்வை எமக்குத் தருகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமை தூய்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம்களுக்கு இருப்பது போலவே அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை தூய்மைப்படுத்தும் பொறுப்பும் முஸ்லிம்களைச் சார்ந்ததாக உள்ளது. நபியவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூறுகின்ற நாம் அவ்விண்ணுலக யாத்திரையின் மையமாகவும்- உலகில் தவ்ஹீதை நிலைநாட்ட வந்த பல நபிமார்களும் இறைத்தூதர்களும் இறைத்தூதைப் பெற்ற இடமாகவும் முஸ்லிம்களின் முதற்கிப்லாவாகவும் விளங்கம் பலஸ்தீனில் அமைந்துள்ள பைதுல் மக்திஸை இச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அது மீண்டும் அந்தச் சண்டாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பிறக்க வேண்டும். 

நபிகளாரின் இஸ்ரா நிகழ்வைப் பற்றி விளக்கும் அல்குர்ஆன் அத்தியாயம் ஸுரதுல் இஸ்ரா என வழங்கப்படுகிறது. அவ்வத்தியாயத்தின் முதல் வசனம் இஸ்ராவைப் பற்றிக் கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனங்கள் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் பற்றியும்- யூதர்களின் அட்டகாசங்கள்- வேதத்திற்கு முரணான அவர்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் விளக்குகிறது. இவ்வாறு இஸ்ராவைத் தொடர்ந்து யூத சமூகத்தைப் பற்றிக் கூறுவதானது- அவர்களின் ஆதிக்கத்திலிருந்து என்றும்- எப்போதும் மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்துவதாகும். 

நபிகளார் பெற்ற நன்மைகள் 

இஸ்ராவும் மிஃராஜும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கௌரவமாகவம் அமைந்தது. அண்ணாரை அல்லாஹ் இக்குறுகிய உலகத்திலிருந்து பரந்து விரிந்த வானுலகம் நோக்கி உயர்த்தி தன் சன்னிதானம் வரை வரவழைத்து கௌரவித்தான். பல அற்புதக் காட்சிகளையும் அன்னாருக்கு காண்பித்து கௌரவித்தான். 

அனைத்துக்கும் மேலாக நபியவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலகப் பயணம் அவர்களுக்கு இறைவனால் வழஙகப்பட்ட ஒரு பெரும் பயிற்சியாக அமைந்தது. அல்லாஹுத்தஆலா அன்னாரை இந்த யாத்திரையின் மூலமாக உடல்- உள- சிந்தனா ரீதியாக பலப்படுத்தினான். தனது தூதின் பளுவை சுமப்பதற்கும்- தொடர்ந்து இடம்பெறவிருக்கம் ஹிஜ்ரத்தின் சிரமங்களைச் சகிப்பதற்கும்- இனி வரும் அறப்போராட்டங்களின் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான மனோவலிமையையும் ஆன்மீகப் பலத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். இந்த வகையில் இஸ்ராவும்- மிஃராஜும் நபியவர்களுக்கு முழு அளவில் வழங்கப்பட்ட பயிற்சியாக அமைந்தன. 

நபியவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட அன்றைய சூழ்நிலையை நோக்கும் போது இப்பயணமானது அவர்களுக்கு மன ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கூடியதாக அமைந்தது. ஏனெனில் நபியவர்களது அழைப்புப் பணிக்கு பக்க பலமாக- துணையாக- ஆறுதலாக- உற்சாகமூட்டுபவராக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களும்- பாதுகாப்பு அரணாக இருந்த சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் ஒரே ஆண்டில் மரணமடைந்தார்கள். இவ்விருவரதும் இழப்பு நபியவர்களை கடுமையாகப் பாதித்தது. காபிர்களின் தொந்தரவும்- துன்புறுத்தலும் அதிகரிக்கத் தொடங்கின. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் : 

இறiவா! எனது பலவீனத்தையும்- வழியறியா நிலையையும்- மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையையும் உன்னிடமே முறையிடுகிறேன். அருளாளனுக்கெல்லாம் அருளாளனே! ரஹ்மானே! நீ தான் பாதிக்கப்பட்டோரின் ரப்பாக இருக்கிறாய். உனக்கு என்மீது கோபம் இல்லையெனில் நான் எதனையும் பொருட்படுத்துவதற்கில்லை. உனது திருப்தியே எனக்குப் பெரிது. (தபகாது இப்னு ஸஃத்) 

இந்நிலையில் தான் அல்லாஹ் தன் சிறப்புக்குரிய அடியாருக்கு உதவிக்கரம் நீட்டினான். தன்பால் அன்னாரை வரவழைத்தான். அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். நபியவர்களை வதைத்துக் கொண்டிருந்த இப்பூவுலகத்தின் கருமேகங்களைப் போக்கக் கூடிய- எதிர்கால வெற்றிக்குக் கட்டியம் கூறும் அத்தாட்சிகளைக் காண்பித்தான். அவற்றின் மூலம் அண்ணலாரின் ஈமானுக்கு மேலும் வலுவூட்டினான். பூமியையும்- பூமியிலுள்ளோரையும் துச்சமாக மதிக்கும் மனோநிலையை அளித்தான். தான் காணும் அம்மாபெரும் அதிசயங்களினதும் அற்புதப் படைப்புகளினதும் இறைவன் தனக்குத் துணை நிற்கிறான் என்ற உணர்வை இறைவன் அண்ணலாருக்கு கொடுத்தான். இந்த வகையில் இஸ்ராவும்- மிஃராஜும் நபியவர்களுக்கு புத்துணர்ச்சியையும்- புதுத் தெம்பையும் வழங்கியது என்றால் அது மிகையாகாது. இவ்வுண்மையையே அல்லாஹ் தன் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்: 

உம்மை நாம் ஸ்திரப்படுத்தி (உறுதிப்படுத்தி) வைக்காதிருப்பின் நீர் ஓரளவாயினம் அவர்கள்பால் சாய்ந்து விடக் கூடுமாய் இருந்தது. (17:74) 

மிஃராஜ் ஒரு பரிட்சை 

மிஃராஜ் சம்பவமானது அன்றிருந்த உண்மை முஃமின்களை பிரித்தறிவதற்கும்- போலிகளை இனங்காண்பதற்கும்- உறுதியான ஈமானைப் பெற்றிருந்தோரையும் ஈமானில் பலவீனர்களாக இருந்தோரையும் நபிகளார் அறிந்து கொள்ளவும் துணை புரிந்தது. இவ்வுண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகிறான் : 

நபியே! நாம் (இஸ்ரா- மிஃராஜின் போது) உமக்குக் காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய) ஒரு பரீட்சையாகவே அமைத்தோம். (17:60) 

உண்மையில் ஹிஜ்ரத்துக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற இஸ்ராவும்- மிஃராஜும் தொடர்ந்து வர இருக்கும் நிலைமைகளுக்கு முகங் கொடுக்க தன்னுடன் இருப்பவர்கள் தயாhனவர்களாக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நபிகளாருக்கு துணை புரிந்தது. 

இஸ்ராவையும்- மிஃராஜையும் முடித்துக் கொண்டு திரும்பிய நபி (ஸல்) அவர்கள் அதனை அடுத்த நாள் காலையில் மக்கள் மத்தியில கூறவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபியவர்கள்- தான் நேற்றிரவு மக்காவில் இருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வானுலகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் நேற்றிரவே மீண்டும் திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களை பொய்ப்பிப்பதற்கு தங்களுக்கு நல்லதோர் ஆதாரம் கிடைத்து விட்டதாக கருதியமையே காபிர்களது ஆனந்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தை வைத்தே முஹம்மதின் தோழர்களையும் அவரின் வலையில் விழ இருப்போரையும் இலகுவில் பலவீனப்படுத்தி முஹம்மரை விட்டும் அவர்களைப் பிரித்து தூரமாக்கி விட முடியும் என அவர்கள் மனப்பால் குடித்தனர். நபியவர்கள் மிஃராஜ் சென்றதைக் கூறிய மாத்திரத்தில் சிலர் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர். 

உமது நபி நேற்று இரவோடிரவாக விண்ணுலகம் போய் வந்ததாகப் பிதற்குகிறாரே? இதனையும் நீர் நம்புவீரோ! என ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அளித்த பதில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதைவிடப் பாரதூரமான செய்தியை அவர் கூறிய போது நான் அவரை நம்பவில்லையா? இறைவனிடம் இருந்து தனக்கு வஹி வருவதாக அவர் கூறினாரே! அதனையே நம்பிய நான் ஏன் இதனை நம்பக் கூடாது? அன்னார் இதனைக் கூறியிருந்தால் நான் இதனை எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி நம்புபவனாகவே இருப்பேன்- என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்பட ஏனைய முஃமின்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது நபிகளாருக்கு பெரும் திருப்தியைக் கொடுத்தது. தம் முன்னே காத்திருக்கும் பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்கும் இந்தப் பாதையில் தாம் எதிர்நோக்கவிருக்கும் சோதனைகளை எதிர்நோக்குவதற்கும் உரிய வலிமையைப் பெற்ற மனிதர்கள் பலர் தம்முடன் இருப்பதை நபியவர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். 

மிஃராஜின் பரிசு 

மிஃராஜின் இரவிலே தான் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்திற்குச் சென்ற இறைத்தூதருக்கு அவன் அளித்த சன்மானமாக தொழுகை அமைந்தது. அல்லாஹ் அதனை ஏனைய சன்மார்க்கக் கடமைகள் போன்று இப்பூவுலகில் வைத்து விதியாக்காது உயர்ந்த மலக்குகள் மத்தியில் வானுலகில் வைத்து கடமையாக்கினான். அந்தப் பரிசை தன் தூதருக்கும் தனது அடியார்கள் அனைவருக்குமான நிரந்தர நிலையான மிஃராஜாகவும் ஆக்கி வைத்தான். தன்னோடு தனது நபியவர்கள் விரும்பும்போதெல்லாம் உரையாடுவதற்கான ஊடகமாகவும் தொழுகையை அமைத்து வைத்தான். 

தொழுகையை நிலைநாட்டுங்கள். அதனை விட்ட முஷ்ரிக்குகளாக ஆகி விடாதீர்கள். (30:31) 

என அல்குர்ஆன் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் : 

ஈமானுக்கம் குப்ருக்கும் இடையிலுள்ள தடை தொழுகையாகும். (முஸ்லிம்) 

மிஃராஜ் வழங்கிய சொத்தான தொழுகை நபிகளாருக்கு அனைத்திலும் பிரியமான ஒன்றாக அமைந்திருந்தது. 

தொழுகையில் தான் எனக்குக் கண்குளிர்ச்சி உள்ளது (நஸயீ) என நபியவர்கள் கூறினார்கள். 

புனித மிஃராஜ் நினைவுகூரும் போதெல்லாம் மிஃராஜின் பரிசாக அமைந்த தொழுகையின் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும். அதனை சீர் செய்து கொள்ள வேண்டும் என உறுதி கொள்ள வேண்டும். 

மிஃராஜ் சித்தரிக்கும் இஸ்லாம். 

நபிகளார் மேற்கொண்ட மிஃராஜை மேலுமொரு கோணத்தில் பார்க்க முடிகிறது. அதாவது இஸ்லாத்தை- அதன் பாதையை படம் பிடித்துக் காட்டுவதாகவும்- வேறு வார்த்தையில் சொல்வதாயின் இறைவனை அடைவதற்கான- அவன் திருப்தியை பெறுவதற்கான பாதையை- அப்பாதையின் மைற்கற்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சித்தரித்துக் காட்டுவதாகவும் மிஃராஜ் அமைந்துள்ளது. மேலும் கீழ்க்கண்ட அம்சங்களையும் இந்த மிஃராஜ் பயணம் நமக்குத் தொட்டுக் காட்டுகின்றது. 

1. தௌபா 

2. ஜிஹாத் 

3. தொழுகை 

4. ஸகாத் 

5. பெரும்பாவம் வட்டி 

6. நாவின் விபரீதங்கள் 

7. பாவங்களின் பயங்கரம் 

 

நன்றி : ஏ1ரியலிஸம்.காம்


0 comments:

Post a Comment