லிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்

லிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்

 எம்.எஸ்.எம். இம்தியாஸ்


லிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் புதிய பாணியில் அமெரிகா செயற்படுகிறது அதற்கு ஐ.நா. ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் "உலக நாடுகளுக்கிடையில் யுத்தம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருக்கவும் நல்லுறவுகளை வளர்க்கவும் அவசியம் கருதி உருவாக்கப்பட்டதுதான் ஐ.நா. சபை". ஆனால் இன்று அறபு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் தவறான செயலை ஐ.நா. செய்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டனின் சைகைக்கு தலையாட்டும் சபையாக ஐ.நா. ஆகியதன் விளைவாகவே இன்று உலகம் பெரும் அழிவை சந்திக்கிறது.

கடந்த 2001 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான். ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா முன்வைத்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் உண்மை நிலவரங்களை கண்டறியமுனையாமல் அவ்விரு நாடகள் மீது யுத்தம் தொடுக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியது.

"ஈராக்கில் இரசாயன அயுதங்கள் உண்டு" என காரணங்களைக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன் ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை துவம்சம் செய்தது. 6 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டு எண்ணெய் வயல்கள் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் பங்கு வைக்கப்பட்டதன் பின்புதான் ஈராக்கில் எவ்வித இரசாயன ஆயுதங்களும் இல்லை தவறுதலாக நடந்து விட்டது என புஷ்ஷூம் பிளேயரும் கூறினர்.

அழிந்த சொத்துக்களுக்கும் இழந்த உரிமைகளுக்கும் பறிபோன உயிர்களுக்கும் பொறுப்பு சொல்வது யார்?

அறபு நாடுகளின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க அமெரிக்கா, பிரிட்டன் போடும் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்று, அங்கீகாரம் வழங்கும் ஜ.நா சபையின் போக்கினால் இன்று ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் அழிந்து போய்விட்டன.

தற்போது லிபியாவின் உள்நாட்டு கிளர்ச்சியை காரணம் காட்டி, அமெரிக்கா நேட்டோவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு ஐ.நா.வை துணைக்கு அழைத்துக் கொண்டு அப்பாவி லிபிய மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்து வருகின்றது.

கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது போராட்டங்கள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. திடீரென அப்போராட்டக்காரர்கள் எப்படி கிளர்ச்சியாளர்களாகவும் ஆயுததாரிகளாகவும் மாற்றப்பட்டார்கள்?

தூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் போராட்டமும் இயற்கையாக எழுந்ததாகவே தென்பட்டது. அது வெற்றியும் பெற்றது. லிபியாவிலும் இயற்கையாகத் தொடங்கப்பட்ட போராட்டம் இடைநடுவில் ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது எப்படி?

கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்பட்டு பின்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா லிபியா மீது யுத்தத்தை துவங்கியதன் மர்மம் என்ன?

கடாபி அமெரிக்காவிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரானவராகக் காணப்பட்டார். 1980 ஆண்டுக்குப் பின் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரேகன் பலமுறை லிபியா மீது தாக்குதல் தொடுத்து கடாபியை கொலை செய்ய எத்தணித்தார். இன்று வரை அது முடியாமல் போனது. தற்போது உள்விவகாரங்களை மூட்டி விட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு லிபியாவை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கவும் எண்ணெய் வயல்களை பங்குபோடவும் முனைந்துள்ளது அமெரிக்கா என்பது வெளிப்படை. கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டால் எண்ணெய் வயல்களை ஏப்பமிட முடியாது என்றபோதே அமெரிக்கா அவசரமாக போரை ஆரம்பித்தது.

கடாபி தன்னுடைய குடிமக்க்ள மீது நடாத்தும் அடக்குமுறைகளை எவ்வழிகளிலும் நியாயப்படுத்திட முடியாது. கடாபியின் இச்செயல் கண்டிக்கத்தக்கதே. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அநியாயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை?

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்?

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே! இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்?

பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அந்த மண்ணின் சொந்தக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிவருகிறது இஸ்ரேல. லிபியாவில் நடக்கும் அனியாயங்களை விட பலகோடி அக்கிரமங்கள் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவருகின்றது. அப்படியாயின் இஸ்ரேலுக்கெதிராக போர் பிரகடனம் செய்வது யார்?

லிபியாவிற்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களக்கு சார்பாக பிரான்ஸ், கனடா. பிரிட்டன், அமெரிக்கா ஆரம்பித்துள்ள இப்போருக்கு "துணிகரமான நீண்ட பயணத்தின் உதயம்" என பெயரிடப்பட்டுள்ளது.

துணிகரமான நீண்ட பயணத்தில் இவ்யுத்தம் மேலும் பல அறபு நாடுகளுக்குளும் ஊடுருவும் என்பதே அர்த்தமாகும். தற்போது லண்டனில் இவ்வலரசுகள் ஒன்று கூடி லிபியாவின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனை நடாத்தி வருகிறது. அடுத்தவனின் சொத்தை எப்படி பங்கு போட்டு பராமரிப்பது என்பதே இவ்வுயர்மட்ட பேச்சுவார்த்தையின் பிரதான செய்தி. கடாபிக்கு பதிலாக் ஆமாசாமி போடும் இன்னொரு ஆசாமியை கொண்டுவருவதில் தயாராகுகிறார்கள்.

சிரியாவிலும் யெமனிலும் இப்போது உருவாகிவரும் உள்நாட்டு பிரச்சினைகளை காரணம் காட்டி சிரியாவிற்குளும் அதற்கடுத்து ஈரானுக்குள்ளும் யுத்தம் தொடுக்க முனையலாம். இவ்விரண்டு நாடுகளின் மீதும் போர் தொடுக்க அமெரிக்கா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

வீட்டோ அதிகாரம் பெற்ற சீனாவும். ரஷ்யாவும் லிபியாவிற்கு எதிரான யுத்தத்தை கண்டித்துள்ளதுடன் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் குரல் கொடுக்கிறது. இது கபடமில்லாத ஏமாற்றமும் இரட்டை வேடமும் ஆகும்.

அமெரிக்கா ஆரம்பித்த இவ் யுத்தம் அநீதியானது எனத் தெரிந்த பின் ஐ.நா.வில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் யுத்தத்தை நிறுத்தியிருக்கக் கூடாது. வீட்டோவை பயன்படுத்தாமல் விலகி நின்று யுத்தத்திற்கு வழிவிட்ட பின் கண்டனம் தெரிவிப்பதனால் எந்த நன்மையுமில்லை. இவர்களது "கார்ட்போட்" அறிக்கைகள் தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே அக்கிரமங்கள் புரிய ஆரம்பித்துள்ளது.

லிபியாவும் ஈராக்கும் சீனாவினதும் ரஷ்யாவினதும் நெருங்கிய தோழமை நாடு. சதாம் உசைன் கொல்லப்பட்டபோதும் லிபியா அழிந்துகொண்டிருக்கும் போதும் நியாயமாக நடந்து நீதியை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அறிக்கை விடுவதிலிருந்து இவர்களது பின்னணி தெளிவாகிறது.

அறபு நாடுகளின் ஒருங்கிணைப்பான அறபு லீக்கும் அடங்கியிருப்பதனால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் இந்த யுத்தம் அந்நாடுகளையும் ஆக்கிரமிக்க வழிசமைக்கலாம். கடாபியின் வார்த்தையில் சொல்வதானால் புதிய சிலுவை யுத்தம் மஸ்ஜிதுகளின் கோபுரங்களையும் தகர்த்து விடலாம்.

கடாபியின் போக்கு தப்பு என்றால் சர்வதேச நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, லிபியாவை அழிக்கவோ அந்நாட்டு மக்களை அழிக்கவோ எந்த வழிகளிலும் அனுமதிக்க முடியாது.

கடாபி கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை விட லிபிய மக்கள் மீது அமெரிக்காவின் கூட்டுப் படை மேற்கொண்டு வரும் யுத்தமும் அழிவும், படுகொலையும் பல மடங்கு அக்கிரமானது. லிபியாவின் முக்கிய கேந்திரஸ்தலங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மக்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்த அமெரிக்கா லிபியாவை துவம்சம் செய்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்த முனைகிறது. இனிவரும் காலங்களில் லிபியா இன்னுமொரு ஈராக்காகவோ ஆப்கானிஸ்தானகவோ மாறலாம். ஆமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நீதிக்காக போடினால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படலாம்.