துருக்கியில் இஸ்லாமிய இயக்க வரலாறு

தமிழ் சுருக்கம் அபூ அப்துல்லாஹ்
கடுமையான மதச்சார்பற்ற சிந்தனைப் போக்குக் கொண்ட நாட்டில் இஸ்லாமிய எழுச்சியைக் காண்பது மிக ஆச்சிரியமான ஒரு விடயமாகும். துருக்கி மதச்சார்பற்ற ஐரோப்பிய சிந்தனையை விட மோசமானதாகும். ஐரோப்பா மத்த்தினை மாத்திரம் அரசியலிலிருந்து பிரித்தது அதேநேரம் துருக்கி மதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அடிப்படையில் தனது சிந்தனையை கட்டியெழுப்பியுள்ளது.

1924ம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சி மிகக்கடுமையானதாக அமைந்திருந்தது, முஸ்லிம்களை ஒன்று சேர்த்திருந்த கிலாபத் மாத்திரம் வீழ்ச்சியடையவில்லை, மாறாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை இஸ்லாமியத்துடன் சேர்த்து அழைப்பு விடுத்தவர்களும் மறைந்து விட்டனர். அங்கே ஒலித்ததெல்லாம் மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கும், தேசியவாதப் போக்குக் கொண்டவர்களின் குரல்கள்தான். இது துருக்கியில் மாத்திரமல்ல எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட்டது.
இந்த வீழ்ச்சி வெறுமனே எதிர்ப்பின்றி நிகழவில்லை, மிகக்கடுமையான அடக்குமுறையும் அணியாயம் காணப்பட்ட காலப்பகுதியில் சில இஸ்லாமிய இயக்கங்களும் தோன்றின.
ஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் உருவாக்கிய இயக்கம் மீண்டும்கிலாபத் வரவேண்டுமென அழைப்பு விடுத்தது, மதச்சார்பற்ற சட்டங்களை மிகக்கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவு அதாதுர்க்கினால் இந்த இயக்கம் நசிக்கப்பட்டது, ஷெய்க் அவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள், அமைப்பின் அங்கத்தவர்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர், ஏனையவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே நாஸ்திக சிந்தனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது.
இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் ஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் துருக்கி சூபித்துவ சிந்தனையைக் கொண்டவர், நக்ஷபந்தியா தரீக்காவை சார்ந்தவர், எனவே இது நாம் சாதரணமாக அறிகின்ற சூபித்துவத்தை விடவும் வித்தியாசமான ஒரு மனப்பதிவினை எமக்குத் தருகிறது. இவர் நடைமுறை உலகினையும் அரசியலையும் விளங்கியருந்தார், அணியாயக்கார ஆட்சியாளர்களை எதிர்த்து நின்றார், சத்தியத்தை எடுத்துக் கூறினார், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார், தூக்குத் தண்டனைக்கு வீரத்துடன் முன்வந்தார், சமூகப் பிரச்சினைகளை விட்டு தூரமாகவோ ஓரமாகவோ அவர் இருக்கவில்லை. எனவே துருக்கிய சூபித்துவம் பித்அத்துக்கள் நிறைந்ததாக காணப்படவில்லை, அதன் கருத்து அவர்கள் தவறுகள், பித்அத்கள் என்பவற்றிலிருந்து முற்று முழுதாக விடுபட்டிருந்தார்கள் என்பதல்ல. உஸ்மானிய கிலாபத்தின் பெரிய ஆட்சியாளர்களான முஹம்மது பாதிஹ், இரண்டாம் முராத், பாயஸீத் அஸ்ஸாயிகா, முதலாம் ஸலீம் இன்னும் முக்கிய பிரமுகர்களும் சூபித்துவ சிந்தனையையைச் சார்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.
ஷெய்க் ஸயீத் பீரான் அவர்களின் மரணத்துடன் இஸ்லாமிய இயக்கமும் மரணித்துவிடவில்லை, மாறாக இன்னொரு சூபித்துவ அறிஞருடன் மிகப்பலமாக தோன்றியது. அவர் ஷெய்க் ஸயீத் பீரான் அவர்களைப் பின்பற்றியவரும், மிகப்பெரிய அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பதீஉஸ்ஸமான் ஸயீத் அல் நூர்ஸியாகும். அவர் கேவலமிக்க மதச்சார்பற்ற அடிப்படைகளை பகிரங்கமாக எதிர்த்தார், இதன் காரணமாக அரசாங்கத்தினால் துருக்கியிலே மிகத்தூரவுள்ள ஒரு நகரத்திற்கு துரத்தப்பட்டார், அது அவ்ரிபா நகரமாகும், மரணிக்கும் வரை அங்கேயே தனது வாழ்நாளை கழித்தார் அது 1925-1960வரையாகும். ஆனாலும் அவரது கடிதங்களும், புத்தகங்களும் இடைவிடாது அவரது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருந்தன. இது மிகக்கடுமையான அடக்குமுறைக்கு மத்தியிலும் துருக்கியில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இவர் மிக முக்கியமான அறிஞர், அவரது தாக்கம் இன்னும் துருக்கிய மக்களுக்கு மத்தியில் பிரதிபலிக்கிறது.

1930ம் ஆண்டு அதாதுர்க்கின் அரசாங்கத்தின் கீழ் இஸ்லாமிய் கல்விநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அவனது மரணத்தின் பின் 1938இல் மீண்டும் கிராமங்களில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1947இல் இது இன்னும் சிறியளவு விஸ்தரிக்கப்பட்டது.
1950ம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்தில ஒரு மாற்றம் நடைபெறுகிறது. அத்னான் மன்தீஸ் என்பவர் பிரதம மந்திரியாக பதவியேற்றதாகும். இவரது ஆட்சி 1960 வரை நீடித்தது. இவர் ஒரு இஸ்லாமியவாதியாக இருக்கவில்லை, மாறாக நாட்டுப்பற்றுமிக்கவராக காணப்பட்டார். எனவே எல்லா தரப்பினருடனும் நல்லமுறையில் நடந்து கொண்டார். இவரது காலப்பகுதியில் இஸ்லாமிய செயற்பாடுகள் கணிசமான அளவு அதிரித்தது. இதனை காண சகிக்காத இராணுவம் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை தூக்கு மேடைக்கு அனுப்பியதுடன் அவரது கட்சியில் அங்கத்துவம் வகித்த முக்கியானவர்களுக்கும் தூக்குத்தணடனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இராணுவத்தினர் இஸ்லாமிய நிலையங்களை கடுமையாக எதிர்த்தனர், அதே வருடத்தில் தான் அல்லாமா ஷெய்க் பதீஉஸ்ஸமான் நூர்ஸி மரணமடைகிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தினர் அவரது கப்ரை தோண்டி அவரது ஜனாசாவை வேரொரு இடத்தில் அடக்கினர், இன்று வரை அது அறிய்படவில்லை. எனவே இராணுவத்தினர் எவ்வளவு காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள் என்பதனை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிலைமை துருக்கிய வரலாற்றில் இஸ்லாமிய தளபதி நஜ்முத்தீன் அர்பகான் தோன்றும் வரை நீடித்தது. அவர் 1972ம் ஆண்டுஸலாமா கட்சியை ஆரம்பித்தார், இது தொட்டிலிலேயே சுடுகாடு செல்லக் கூடாது என்பதற்காக தெளிவான இஸ்லாமிய கட்சியாக காணப்படவில்லை, மாறாக தேசிய சீர்திருத்தக் கட்சியாகவே காணப்பட்டது.
இந்தக் கட்சியின் உருவாக்கத்தின் பின் பொருளாதார அரசியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்து ரஜப் தையிப் அர்துகான் அவர்களும் தனது பேராசிரியருடன் இந்தக் கட்சியில் இணைந்து கொள்கிறார், இங்கிருந்துதான் அவரது அரசியல் வாழ்வு ஆரம்பமாகிறது.
அர்பகானின் நடவடிக்கைகள் அனைத்தும் துருக்கிய மதச்சார்பற்ற அரசின் கண்களை விட்டும் தூரமானதாக இருக்கவில்லை. எனவே ஸலாமா கட்சி 1980ம் ஆண்டு கலைக்கப்படுகிறது.
என்றாலும் பேராசிரியர் அர்பகான் அவர்கள் சலிப்படையாமல்1983ம் ஆண்டு ரபாஹ் கட்சியை ஆரம்பித்தார். இது தெளிவான இஸ்லாமிய போக்கு கொண்டதாக மிளிர்ந்தது.

இந்தக்கட்சியில் ரஜப் தையிப் அர்துகான் மிக விரைவாகவே பிரகாசிக்கத் தொடங்கினார். 1985ம் ஆண்டு இந்தக் கட்சியின் இஸ்தான்பூல்கிளைக்கு தலைவராக மாறினார். அப்போது அவரது வயது 31 ஆகும்.
இஸ்லாமிய போக்குக் கொண்ட இந்தக் கட்சியின் செல்வாக்கு மிக வேகமாக முழுத் துருக்கியிலும் பரவியது, 1994ம் ஆண்டு நகரசபை தேர்தலிலும் பெரும் வெற்றியைக் கண்டது. அங்கே அர்துகானும் வெற்றிபெற்றார்.
ஒரு இஸ்லாமியவாதி இஸ்தான்பூல் நகரசபைக்கு தலைவராக மாறியது ஒரு திடீர் எதிரொலியை ஏற்படுத்தியது. வருட காலத்தில்(1994-1998) அந்த நகரை ஒரு செல்வாக்குள்ள நகராக மாற்றியமைத்தார். அவரிடம் இந்த வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்கப்பட்ட போது "நீங்கள் அறியாத ஒரு ஆயுதம் எம்மிடம் இருக்கிறது, அதுதான் ஈமானாகும். எம்மிடம் இஸ்லாமிய பண்பாடுகள் இருக்கின்றன, நபியவர்களின் முன்மாதிரி இருக்கின்றதுஎன்று வீரத்துடன் பதிலளித்தார். அவரது பிரமிக்கத்தக்க சாதனைகளும் உயர்ந்த நிலைப்பாடும் மக்கள் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது.
1995ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 158ஆசனங்களை இந்தக் கட்சி பெற்றது (மொத்தம் 550 ஆசனங்களாகும்), இதனடியாக 1996ம் ஆண்டு அர்பகான் அவர்கள் துருக்கியின் பிரதம மந்தியாக மாறினார். இது கிலாபத் வீழ்சிசயடைந்த பின் ஆட்சிக்கு வந்த முதலாவது இஸ்லாமியவாதியாகும்.
ஆட்சியேற்று ஒருவருட காலத்திற்குள் பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்டார். இதனை சகிக்க முடியாத மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட இராணுவத்தினர் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை பலவந்தமாக பதவி விலகச் செய்தனர். ரபாஹ் கட்சியும் கலைக்கப்பட்டது. அர்பகான் அவர்களுக்கு 5 வருட காலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவ்வாறே அர்துகான் அவர்களுக்கும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது, என்றாலும் அவரது நன்நடத்தை காரணமாக 4 மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். என்றாலும் வருடகாலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மீண்டும் அர்பகான் அவர்கள் நம்பிக்கையிழக்காது 2000ம் ஆண்டு பழீலா கட்சியை ஆரம்பித்தார், அவருக்கு அரசியல் தடை இருந்ததால் வேறு ஒருவரின் பெயரில் அது பதியப்பட்டது, இந்தக் கட்சியில் அர்துகானும் அப்துல்லா குல் அவர்களும் இணைந்து கொண்டனர்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்தக் கட்சிக்கும் ஏற்படும் என உணர்ந்த அர்துகானும், அப்துல்லா குல் அவர்களும் கட்சியை விட்டு ஒரமாகி 2001ம் ஆண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை நிறுவினர். இந்தக் கட்சி துருக்கிய மக்களுக்கு மத்தியில் பரந்த செல்வாக்கினை பெற்றது. 2002இல் நடைபெற்ற தேர்தலில் 368 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றிபெற்றது, அர்துகான் அரசியல் தடைக்காலத்தில் இருந்த்தால் அமைச்சரவை அப்துல்லா குல்லின் தலைமையில் கூடியது. பின்னர் பாராளுமன்றத்தின் அழுத்தத்தினால் சட்டம் மாற்றப்பட்டு அதேவருடம் அர்துகான் பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்தார்.
2003இல் அர்பகான் மீதான அரசியல் தடையும் நீக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் ஸஆதா கட்சியை ஆரம்பித்தார் என்றாலும் கண்ணிவைத்து காத்திருந்த இராணுவத்தினர் பல குற்றச்சாட்டுக்களின் பேரில் மீண்டும் அவருக்கு வருட சிறைத்தணடனை விதித்தனர், அப்போது அவரது வயது 72 ஐயும் தாண்டியிருந்தது.
பின்னர் அர்துகான் 2006, 2010 தேர்தல்களிலும் வெற்றியடைந்தார், இராணுவத்தினர் அர்பகானுடன் நடந்து கொண்டது போன்று அர்துகானுடனும் நடந்து கொள்ளாமைக்கு அவருக்குள்ள அதிக மக்கள் செல்வாக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குள்ள வேட்கை, இந்தமாதிரியான நடவடிக்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு போன்றவைகளாக இருக்கலாம்.

யா அல்லாஹ் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்துவாயாக .


0 comments:

Post a Comment