சூரத்துல் ஆதியாத் (100) மக்காவில் அருளப்பட்டது.
பொருள்
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!
(1) மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகிற குதிரைகள் மீது சத்தியமாக!
(2) பின்னர் குழம்புகளில் இருந்து தீப்பொறியை எழுப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!
(3) மேலும் அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனால் புழுதியைக் கிளப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!
(4) மேலும் கூட்டத்தின் நடுவே நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக!
(5) உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(6) திண்ணமாக அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கிறான்.
(7) மேலும் அவன், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டவனாக இருக்கிறான்.
(8) அவன் அறியமாட்டானா? (அதாவது) மண்ணறைகளில் அடக்கப்பட்டுள்ள அனைத்தும் வெளியே கொண்டு வரப்;பட்டால்,
(9) மேலும் நெஞ்சங்களில் மறைக்கப்பட்டு உள்ளவை அனைத்தும்; ஒன்றுதிரட்டப்பட்டால்,
(10) திண்ணமாக அவர்களின் இறைவன் அந்நாளில் அவர்களைப்; பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான் என்பதை!
இறைவழிப் போராளிகள் பயணிக்கும் குதிரைகள்; மீது சத்தியம் செய்வதைக் கொண்டு இந்த அத்தியாயம் தொடங்குகிறது.
அத்துடன் அந்தக் குதிரைகளின் பல்வேறு குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.அந்தக் குதிரைகள் வேகமாகச் செல்கிற பொழுது அவற்றின் குழம்புகள் தரையிலுள்ள பொடிப்பொடிக் கற்களில் பட்டுத் தீப்பொறிகள் தெறிக்கின்றன.
போராளிகள் இவற்றின் மீதேறிப் புறப்பட்டுச் சென்று அதிகாலையில் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். அதனால் அதிகாலை நேரத்தில், காணும் திசை எங்கும் புழுதி மண்டலம்! மேலும் அந்தக் குதிரைகள் எதிரிகளின் அணிகளைப் பிளந்து கொண்டு ஊடுருவிச் செல்வதற்கு எத்தனிக்கின்றன! - குதிரைகள் பற்றிய இந்த வர்ணனை, போராளிகளின் வீரத்தைப் பறை சாற்று வதாகும்.
இந்தத் தொடர் சத்தியங்களுக்குப் பின்னணியில் மனிதனின் தீய குணங்கள் சில இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. அதற்குத் தெளிவான கருத்துப் பொருத்தமும் உள்ளது.
அல்லாஹ் பொழியும் அருட்கொடைகளை அனுபவிப்பதை மனிதன் ஒப்புக்கொள்வதில்லை. அல்லாஹ்விடம் இருந்து அவனுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நலன்களையும் நன்மைகளையும் அவன் மறந்து விடுகிறான். அவன் மேற்கொள்ளும் நிலைப்பாடு களும் செயல்பாடுகளுமே அதற்குச் சாட்சி!
மனிதன் செல்வத்தை அளவுகடந்து நேசிக்கிறான். அதுவே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்குமாறு பல்வேறு காலகட்டங் களில் அவனைத் தூண்டுகிறது.
மேலும் பணத்தைத் திரட்டுவது எப்படி? சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி என்றே எந்நேரமும் மனிதன் சிந்திக்கிறான். அதனால் இறைவழிபாட்டில் அவனது ஈடுபாடு குறைந்து விடுகிறது.
இத்தகைய போக்கு ஆபத்தானது என்று மனிதனை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மறுமை நாளினை நினைத்துப் பார்க்கும் படியும் அன்று மக்கள் மண்ணறைகளில் இருந்து வெளியேறி வருவதை எண்ணிப் பார்க்கும்படியும் அவனிடம் கூறுகிறான்.
அந்நாளில் மக்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி உலகத்தில் அவர்கள் செய்த செயல்களையும் பேசிய பேச்சுகளை யும் ஏற்றிருந்த கொள்கைகளையும் அவர்கள் முன்னிலையில் சமர்ப் பித்து அவற்றின் பேரில் கேள்வி கணக்கு கேட்பான்.
அந்த மறுமை நாளில் பணமோ, உயர் பதவிகளோ எந்தப் பயனும் அளிக்க மாட்டாது. நல்ல அமல்கள்தாம் நற்பயன் அளிக்க வல்லவை.
கவனிக்க வேண்டிய கருத்துகள்
1) அல்லாஹ்வின் பாதையில் (தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது) எனும் ஜிஹாதின் சிறப்பு மகத்தானது.
2) இறையருட்கொடைகளை மறுக்கும் மனிதன் தனக்குத் தானே அநீதி இழைத்தவனாகிறான்.
3) உலகின் சுகபோகங்களையே மனிதன் அதிகம் நேசிக்கிறான்.
4) மறுமை நாளில் மண்ணறைகளில் இருந்து மனிதர்களை அல்லாஹ் வெளியேற்றுவான்.அவர்கள் செய்த அமல்களை ஒன்று திரட்டி கேள்வி - கணக்கு கேட்பான்.
0 comments:
Post a Comment